பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் களு கங்கை ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் சிறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய மழைவீழ்ச்சி நிலைமை மற்றும் ஆற்றின் நீர்மட்ட அளவீட்டு நிலையங்களில் பதிவான நீர்மட்டங்களின் அடிப்படையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களு கங்கை வெள்ளப் பெருக்குப் பகுதியின் தாழ்நிலங்களில் சிறு வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகளூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், மீ ஓயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்துக்கு வந்துசேரும் நீரின் அளவு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று பிற்பகல் 1 மணியளவில் மீ ஓயாவுக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்த்தேக்கத்தின் கீழ்நிலைப் பகுதிகளிலும், மீ ஓயாவின் இரு கரைகளையும் அண்மித்த பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், ஆற்றின் நீர்மட்டத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










