அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Canberra (LCS 30) கப்பல், இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்யும் வகையில், வழமையான துறைமுக விஜயத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Independence வகையைச் சேர்ந்த இந்தக் கரையோரப் போர்க்கப்பல், இதற்கு முன்னர் 2026 ஜூன் மாதம் கொழும்புத் துறைமுகத்துக்கு விஜயம் செய்திருந்தது.
அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான இரு நாடுகளினதும் பொதுவான அர்ப்பணிப்பையும் இந்த விஜயம் வெளிப்படுத்துவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், கப்பலின் விஜயத்தைச் சுமுகமாக முன்னெடுப்பதற்கு இலங்கை கடற்படை வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்த விஜயங்களைச் சுமுகமாகவும் திறமையாகவும் முன்னெடுப்பதற்கு இலங்கை கடற்படை வழங்கும் தொழில்முறை ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் பாராட்டுகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள எமது கடற்படை ஒத்துழைப்பின் வலிமையையும், இந்து சமுத்திரப் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கான எமது பொதுவான அர்ப்பணிப்பையும் ஒவ்வொரு விஜயமும் மேலும் உறுதிப்படுத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
USS Canberra என்பது அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலுள்ள மொபைல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட Independence வகை கரையோரப் போர்க்கப்பலாகும். கரையோர நீர்ப்பகுதிகள் மற்றும் திறந்த கடற்பரப்புகளில் செயற்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பல்வேறு பணிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய கட்டமைப்புகளையும் கொண்டுள்ள இந்தக் கப்பல், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலடிக் கண்ணிவெடிகளை எதிர்கொள்ளுதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
இரண்டாம் உலகப் போரின்போது, 1942ஆம் ஆண்டு சாவோ தீவுப் போரில் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போரிட்டபோது இழக்கப்பட்ட அவுஸ்திரேலியக் கடற்படைக் கப்பலான HMAS Canberraவின் நினைவாகவே இந்த அமெரிக்கக் கப்பலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.










