கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.1 கிலோகிராம் குஷ் கஞ்சாவுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5.1 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 1.15 மணியளவில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் VN671 விமானம் மூலம் இலங்கைக்கு வந்த சந்தேகநபர், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள பசுமை வழியூடாக வெளியேற முயன்றபோது, அவரது சந்தேகத்துக்கிடமான நடத்தை காரணமாக சுங்க அதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளார்.
இதையடுத்து, மேலதிக சோதனைக்காக சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டதுடன், அவரது பயணப் பொதிகளும் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பயணப் பொதிகளைச் சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், பொதி செய்யப்பட்ட பல பொலித்தீன் பைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றை மேலதிகமாகப் பரிசோதித்தபோது, 5.1 கிலோகிராம் குஷ் கஞ்சா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், அதன் சந்தைப் பெறுமதி 5.1 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.










