இலங்கை புகையிரத திணைக்களம், அரசாங்கத் தொழிற்சாலைத் திணைக்களத்துடன் இணைந்து, எஸ்-11 வகையைச் சேர்ந்த மூன்று புகையிரதங்களில் பாரிய திருத்தப் பணிகளை முன்னெடுக்கும் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காக ஒரு புகையிரதத்துக்கு சுமார் 2.5 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி புகையிரத சேவைகளை மேம்படுத்துவதுடன், இரத்மலானை பிரதான புகையிரத பணிமனையின் பராமரிப்புப் பணிச்சுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மாளிகாவத்தை ரயில் முற்றத்தில் இடம்பெற்று வரும் திருத்தப் பணிகளைப் பார்வையிட்டார்.
இதன்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஸ்-11 வகை புகையிரதமொன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் முழுமையான திருத்தப் பணிகளைப் பிரதி அமைச்சர் பார்வையிட்டார்.
திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, புகையிரதத்தின் முன்புறத்தில் தற்போது பொருத்தப்பட்டுள்ள நார் மூலப்பொருளால் தயாரிக்கப்பட்ட (Fibre) முகப்புப் பலகைக்குப் பதிலாக, புதிதாக வடிவமைக்கப்பட்ட துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) பலகை பொருத்தப்படவுள்ளது.
இந்தத் திருத்தப் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த புகையிரதம் 2027 ஜனவரி மாதம் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அரசாங்கத் தொழிற்சாலைத் திணைக்களத்தின் கனரக வெல்டிங் பிரிவின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் இரத்மலானை பிரதான புகையிரத பணிமனை தனது வழமையான பராமரிப்புப் பணிகளை மேலும் வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட மாளிகாவத்தை புகையிரத முற்றம், மலையக, கரையோர மற்றும் களனி பள்ளத்தாக்கு புகையிரத பாதைகள் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் புகையிரதங்களுக்கு பராமரிப்புச் சேவைகளை வழங்கி வருகிறது.
நாடு முழுவதும் சேவையில் ஈடுபடும் புகையிரதங்களுக்கான வழமையான பராமரிப்பு, இயந்திரக் கோளாறுகளைச் சீரமைத்தல் மற்றும் பாரிய திருத்தப் பணிகள் ஆகியவற்றை இந்த நிலையம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










