சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்க மறுத்தால், புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மீண்டும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்வதே தங்களது பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், பிக்குகள் முன்னெடுக்கும் போராட்டத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். தங்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காகவே பிக்குகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அரசாங்கம் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளதாகவும் கூறினார்.
ஜனாதிபதி தொடர்ந்து பிடிவாதமாகச் செயற்பட்டு, ஞானசார தேரரை விடுவிப்பதற்கு வேறு சட்டபூர்வமான வழிகள் இல்லாத நிலை ஏற்பட்டால், மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் எனவும் கஸ்ஸப தேரர் தெரிவித்தார். தேவையானால் ஞானசார தேரரை விடுவிப்பதற்காக மற்றொரு ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
முந்தைய நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், வலியைப் பொருட்படுத்தாமல் மீண்டும் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கான காரணத்தையும் அவர் விளக்கினார். ஏனைய பிக்குகள் வழங்க முன்வந்த மேலதிக வசதிகளைத் தான் நிராகரித்ததாகக் குறிப்பிட்ட அவர், ஞானசார தேரர் சிறையில் துன்பப்படும்போது தங்களால் எவ்வாறு சுகமாக வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் முன்னெடுத்து வரும் போராட்டம், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தற்போது கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.










