சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான மொஹமட் பின் சல்மானிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள மனோ கணேசன், சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவமொன்றையும் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் தனது மனைவி ராஜாமணி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கணவரான இலங்கைப் பிரஜை சகாதேவன், அந்தக் கொலைக்குப் பொறுப்பானதாகக் கூறப்பட்ட சவுதி அரேபிய பெண்ணை மன்னித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அவரது பிள்ளைகளின் நிலைமையை கருத்திற்கொண்டு சகாதேவன் இரக்கத்துடன் அவரை மன்னிக்கத் தீர்மானித்ததாகவும், இதன் மூலம் அவர் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
சிவராசா அனோஜனின் விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ள மனோ கணேசன், அதேபோன்ற கருணை மற்றும் மனிதாபிமானத்தை இலங்கைப் பிரஜையான அனோஜனுக்கும் சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ஒரு காலத்தில் இலங்கை குடும்பம் ஒன்று சவுதி தாயை மன்னித்தது. இப்போது சவுதி அரேபியா இலங்கை மகனுக்கு கருணை காட்டட்டும்” என மனோ கணேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானம், இரக்கம், கருணை மற்றும் உயிரைப் பாதுகாத்தல் ஆகிய அடிப்படைகளில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம்
சவுதி அரேபியாவில் இலங்கை நாட்டைச் சேர்ந்த ராஜமணி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக் குற்றத்திற்காக ஒரு சவூதி அரேபிய பெண் கைது செய்யப்பட்டு, அவருக்கு சவூதி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
உயிரிழந்த ராஜமணியின் கணவரான சகாதேவன், குற்றம் சாட்டப்பட்ட சவூதி பெண்ணின் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பெரும் மனிதாபிமானத்துடன் அவரை மன்னித்தார். இதன் மூலம் அந்த சவூதி தாய் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பினார்.










