தென் கொரியாவில் பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சைக்கு முன்னதாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடம்பெற்ற பரீட்சை மோசடி சர்ச்சையைத் தொடர்ந்து, அந்நாட்டின் கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் (Choi Kyo-jin) பதவி விலகியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சைக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, தேசிய வரிக் கணக்கியல் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற ஒருவர், சிறிய ரக கமரா மற்றும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை உருவானது.
குறித்த நபர், மறைத்து வைக்கப்பட்டிருந்த நுண் கமரா மூலம் பரீட்சை வினாக்களைப் புகைப்படம் எடுத்து, அவற்றை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புக்கு அனுப்பி, கிடைத்த பதில்களை ஸ்மார்ட்போன் ஊடாகப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
தனது சட்டத்தரணியின் யூடியூப் கணக்கில் வெளியிடப்பட்ட காணொளியில், “நான் வரிக் கணக்காளர் பரீட்சையில் மோசடி செய்தேன். எனக்குக் கிடைத்த முதலிடம் நேர்மையான முயற்சியின் மூலம் கிடைத்ததல்ல” என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தென் கொரியாவில் பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையான ‘சுனுங்’ (Suneung) பரீட்சையில் மோசடிகளைத் தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.
இதன் ஒரு பகுதியாக, பரீட்சை நிலையங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வைஃபை (Wi-Fi) வசதிகள் தடை செய்யப்பட்டதுடன், கண்காணிப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக ஸ்மார்ட்போன்கள் பரீட்சை நிலையங்களுக்குள் கொண்டுசெல்லப்படுவதை அடையாளம் காண அவசர எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
மாணவர்கள் பென்சில்களை மாத்திரமே கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், அழிப்பான்கள் உள்ளிட்ட ஏனைய எழுதுபொருட்கள் பரீட்சை நிலையங்களிலேயே வழங்கப்பட்டன. எழுதுபொருட்களுக்குள் இலத்திரனியல் சாதனங்களை மறைத்து எடுத்துவருவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
அத்துடன், பொத்தான்கள் கொண்ட ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறான ஆடைகளை அணிந்து வந்தவர்களின் பொத்தான்கள் மீது மறைக்கப்பட்ட கமராக்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பரீட்சை மோசடிகள் அல்லது முறைகேடுகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர் (சுமார் 57,300 ஸ்டெர்லிங் பவுண்டுகள்) வெகுமதி வழங்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்தது. அதேவேளை, மோசடியில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் காட்டிக்கொடுப்போருக்கு தண்டனைகளில் சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்குவதில் கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் சிரமங்களை எதிர்கொண்டதுடன், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தாமதமானவை என ஆசிரியர் சங்கங்களும் விமர்சித்தன.
இந்நிலையில், பரீட்சை நிறைவடைந்த பின்னர் தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பதிவில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பெரியளவிலான சம்பவங்கள் இன்றி பரீட்சை நிறைவடைந்திருந்தாலும், முன்கூட்டியே போதிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதாக எழுந்துள்ள விமர்சனங்களிலிருந்து தாம் விடுபட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி அமைச்சராக இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அவரது இராஜினாமாவை ஜனாதிபதி லீ ஜே மியுங் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் எட்டு மணித்தியால சுனுங் பரீட்சையானது, மாணவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உயர்தரப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும், அதிக வருமானம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தப் பரீட்சை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தப் பரீட்சையின் முக்கியத்துவம் காரணமாக, அதன் சுமுகமான நடத்தைக்காக தென் கொரியா விசேட ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறது. ஆங்கில செவிப்புலன் பரீட்சை நடைபெறும் 25 நிமிடங்களில் விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் ஒத்திவைக்கப்படுகின்றன. பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் டாங்கிகளின் நகர்வுகளும் இடைநிறுத்தப்படுகின்றன. பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலம் தாமதமாக ஆரம்பிக்கப்படுவதுடன், பரீட்சை நிலையங்களிலிருந்து 200 மீற்றர் தொலைவில் வாகனப் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது.
இம்முறை மோசடி சர்ச்சையைத் தொடர்ந்து, பரீட்சை முடியும் வரை அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் அணைத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பரீட்சை நிலையங்களின் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மாணவர்களின் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், ஆடைகளின் கழுத்துப் பகுதிகள் மற்றும் கைகளும் மறைக்கப்பட்ட கமராக்கள் உள்ளனவா எனப் பரிசோதிக்கப்பட்டன.
மேலும், தங்களிடம் உள்ள சாதனங்களை ஒப்படைக்காமல் மறைத்து வைத்திருப்பவர்களைக் கண்டறியும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள அனைத்து கையடக்கத் தொலைபேசிகளுக்கும் ஒலியை நிறுத்த முடியாத அவசர எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.
இதன்போது, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பரீட்சையில் இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான 111 முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஏறத்தாழ பாதி சம்பவங்கள் அவசர எச்சரிக்கை அறிவிப்புகள் மூலமே கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பரீட்சையைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கு எதிராக உயர்தரப் பாடசாலை மாணவர் ஒருவர் அரசியலமைப்பு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். எனினும், மீளச் சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படும் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்து நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
புதிய கடுமையான விதிமுறைகளின் கீழ், பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டு பிடிபடும் மாணவர்கள் 10 ஆண்டுகள் வரை மீண்டும் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தடை விதிக்கப்படுவதுடன், குற்றவியல் வழக்குகளையும் எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










