ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களின் தூக்கத்தைப் பாதிப்பதாக 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட அமெரிக்க இளைஞர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்துள்ளதாக பியூ ஆய்வு மையத்தின் (Pew Research Center) ஆய்வில் தெரியவந்துள்ளது.
2026 மே 26ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட அமெரிக்கர்களில் 62 சதவீதமானோர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களுக்குக் கிடைக்கும் தூக்கத்தின் அளவைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, ஒட்டுமொத்த அமெரிக்கப் பெரியவர்களில் 41 சதவீதமானோர் ஸ்மார்ட்போன்கள் தங்களின் தூக்கத்தைப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, 5 சதவீதமானோர் மாத்திரமே ஸ்மார்ட்போன்கள் தங்களுக்குத் தூங்குவதற்கு உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தாக்கம் இளம் தலைமுறையினரிடையே அதிகமாகக் காணப்படுவதுடன், 30 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்களில் சுமார் பாதிப் பேரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களின் தூக்கத்தைப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கப் பெரியவர்களில் 53 சதவீதமானோர் தாங்கள் ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கருதுகின்றனர். இந்த எண்ணிக்கை 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, 30 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 64 சதவீதமானோரும், 50 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 49 சதவீதமானோரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதமானோரும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
திரை நேரம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வருகின்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க முயற்சித்ததாக அமெரிக்கப் பெரியவர்களில் 45 சதவீதமானோர் மட்டுமே தெரிவித்துள்ளனர். அதேவேளை, 46 சதவீதமானோர் அவ்வாறான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பயன்பாட்டைக் குறைக்க முயற்சித்தவர்களில் 25 சதவீதமானோர் தங்களது முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும், 52 சதவீதமானோர் ஓரளவு வெற்றியளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அடிக்கடி நிகழும் தன்மை குறித்தும் இந்த ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பெரியவர்களில் நான்கில் ஒருவர், தாங்கள் கிட்டத்தட்ட எப்போதும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
30 வயதுக்குக் குறைந்தவர்களிடையே இந்த எண்ணிக்கை 42 சதவீதமாகவும், 30 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே 33 சதவீதமாகவும் காணப்படுகிறது.
இதற்கிடையில், ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களின் உற்பத்தித்திறனைப் பாதிப்பதாக 34 சதவீதமான அமெரிக்கப் பெரியவர்களும், மனநிலையைப் பாதிப்பதாக 22 சதவீதமானோரும் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஸ்மார்ட்போன்களின் நன்மைகள் குறித்தும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்கால நிகழ்வுகள் மற்றும் தகவல்களை அறிந்துகொள்ள ஸ்மார்ட்போன்கள் உதவுவதாக 73 சதவீதமானோரும், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு உதவுவதாக 51 சதவீதமானோரும் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான அத்தியாவசியமான கருவிகளாகத் தொடர்ந்து காணப்பட்டாலும், அவற்றின் அளவுக்கு அதிகமான பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே கவலை அதிகரித்து வருவதை பியூ ஆய்வு மையத்தின் இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
ஆய்வு அறிக்கை: Pew Research Center










