நியூயோர்க் மாநில செனட் சபைக்கும் மாநில சட்டமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்ட முதல் பலஸ்தீனப் பெண் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34 வயதான அபீர் கவாஸ் (Aber Kawas) படைத்துள்ளார்.
கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், நியூயோர்க் மாநிலத்தின் 12ஆவது தேர்தல் மாவட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹான் கான் டோவை எதிர்த்துப் போட்டியிட்ட அவர், 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
வடமேற்கு குயின்ஸ் பகுதியை உள்ளடக்கிய இந்தத் தேர்தல் மாவட்டம், நியூயோர்க் நகரின் மிகப்பெரிய அரபு சமூகங்களில் ஒன்றைக் கொண்டுள்ள பகுதியாகும்.
தனது வெற்றியைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கவாஸ், நியூயோர்க் மாநில செனட் சபையின் வரலாற்றில் முதல் பலஸ்தீனப் பிரதிநிதியை மக்கள் தெரிவு செய்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மற்றும் ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பு (DSA) ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிட்ட கவாஸ், ஆரம்பத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து தயக்கம் கொண்டிருந்ததாக வெளிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டின.
பலஸ்தீன விடுதலைக்கான தனது கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்துள்ளது.
எனினும், மாறிவரும் அரசியல் சூழலும் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு அதிகரித்து வரும் ஆதரவும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தன்னை ஊக்குவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1948 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பலஸ்தீனத்திலிருந்து இடம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த கவாஸ், அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்ட குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.
அவரது சிறுவயதில், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE) அவரது தந்தை தடுத்து வைக்கப்பட்ட சம்பவம், சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அவருக்கு முக்கியத் தூண்டுதலாக அமைந்துள்ளது.
1,000 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட அவரது தேர்தல் பிரசாரத்தில், மலிவு விலை வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து மற்றும் பலஸ்தீன மக்களுக்கான ஆதரவு ஆகிய விடயங்கள் முக்கிய இடம்பிடித்திருந்தன.
இதற்கு முன்னர், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்புகள் நிதி அல்லது ஏனைய உதவிகளை வழங்குவதைத் தடுக்கும் சட்டமூலத்தை உருவாக்குவதில் மம்தானியுடன் இணைந்து கவாஸ் பணியாற்றியுள்ளார்.
2023ஆம் ஆண்டு மம்தானியுடன் இணைந்து வரைந்த ‘Not on Our Dime!’ எனப்படும் சட்டமூலத்தை மீண்டும் முன்னெடுப்பதே மாநில செனட் உறுப்பினராகத் தனது ஆரம்பகட்ட முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாநில சட்டமன்றத்தில் சிறுபான்மை அரசியல் இயக்கத்தின் பிரதிநிதியாகச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் சவால்கள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள கவாஸ், அடிமட்ட மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகள் மாற்றங்களை ஏற்படுத்தும் வலிமையைக் கொண்டுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பலஸ்தீன உரிமைகளையும் சமூக நீதியையும் முன்னிறுத்திப் போட்டியிட்ட ஜனநாயக சோசலிச வேட்பாளர்கள் பலர் தேர்தல்களில் வெற்றிபெற்றுவரும் சூழலில், கவாஸின் வெற்றியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.










