Create image
இஸ்ரேலில் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கை, 2027ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் கீழ் மட்டுமே முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக தற்போது நடைமுறையில் உள்ள பணியமர்த்தல் திட்டம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் தீர்மானம் தொடர்பில், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம், தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எனினும், 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய பணியமர்த்தல் முறைமை, தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் தெரிவு செய்யும் நடைமுறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர்களுக்கோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணியகம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தனியார் நிறுவனங்கள் நடத்தும் திறன் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள் உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக சட்டப்பூர்வமாக பணம் செலுத்தியவர்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், அவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.










