உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘INS TIR’, ‘INS SUJATA’ மற்றும் ‘ICGS SARATHI’ ஆகிய கப்பல்கள், தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று வியாழக்கிழமை காலை நாட்டிலிருந்து புறப்பட்டன.
மேற்கு கடற்பரப்பில் நடைபெற்ற கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடர்ந்து இந்தக் கப்பல்கள் நாட்டிலிருந்து புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில், அவற்றின் மாலுமிகள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள், இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இதன்போது, பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகள், கப்பல்களின் செயற்பாடுகளை அவதானிக்கும் விஜயங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் மற்றும் கூட்டு இசை நிகழ்ச்சி ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்காகப் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.
மேலும், இன்று காலை கொழும்புத் துறைமுகத்திற்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்களும் இலங்கை கடற்படையும் இணைந்து கூட்டு கடற்படைப் பயிற்சியொன்றை முன்னெடுத்தன.
இப்பயிற்சியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘நந்திமித்ர’ கப்பலும் ‘P 492’ அதிவேகத் தாக்குதல் படகும் பங்கேற்றன.










