மட்டக்களப்பில், 9 வயது சிறுமியை இரும்பு கரண்டியால் சூடு வைத்து, ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக, சிறுமியின் சித்தியான 25 வயதுடைய பெண்ணுக்கு, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த சிறுமியின் தாயார் இல்லாத நிலையில், அவரது தந்தையார் மறுமணம் செய்து கொண்ட 25 வயதுடைய பெண், தனது கணவரின் முதல் மனைவியின் 9 வயது மகளை, கடந்த 2015 மார்ச் 10 ம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 10 ம் திகதி வரையான ஒரு வருட காலத்தில், தொடர்ச்சியாக இரும்பு கரண்டியால் சூடு வைத்து மற்றும் வாயில் துணியை அடைத்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளார்.
குறித்த சிறுமியின் சித்தியை, 2016 ஆம் ஆண்டு பொலிஸார் கைது செய்து அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில், குறித்த வழக்கு 2022ம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி தொடர்ந்து வாதாடி வந்த நிலையில், குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் 2026 ம் ஆண்டு ஒக்டோபர் 13 திகதி இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து, குறித்த பெண்ணுக்கு முதலாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபா அபராதமும், இரண்டாவது குற்றத்துக்கு, தலா ஒரு குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபா அபராதமும், மூன்றாவது குற்றத்திற்கு, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும், குறித்த தண்டனையை சமகாலத்தில் செயல்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.










