வங்கி அதிகாரிகள் எனப் போலியாகத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு மோசடியில் ஈடுபடுவோர் தொடர்பில் பொதுமக்களுக்கு இலங்கையர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது 70 வயதுடைய தந்தை இவ்வாறான தொலைபேசி மோசடியில் சிக்கி 46 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாக குறித்த நபர் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கி ஒன்றின் சார்பில் வரிக் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது தந்தைக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களான OTP இலக்கங்களைக் குறித்த நபர் கோரியுள்ளார். மோசடி என்பதை அறியாத அவரது தந்தை, அந்த விபரங்களை வழங்கியுள்ளார்.
இதன் விளைவாக, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 46 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதே வாரத்தில் இதேபோன்ற இரண்டு மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி அதிகாரிகள் அல்லது அரச நிறுவனங்களின் அதிகாரிகள் போன்று நடித்து மோசடியில் ஈடுபடுவோரிடம் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வங்கிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட எந்தவொரு அரச நிறுவனமும் தொலைபேசி ஊடாக OTP இலக்கங்கள், PIN இலக்கங்கள் அல்லது வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்களைக் கோருவதில்லை என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
எனவே, சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு, குறித்த வங்கியின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










