ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமி, உதவி கோரி எழுப்பிய கூக்குரலைக் கேட்டதும் ஆற்றில் குதித்த நபர், சிறுமியை துணிச்சலுடன் மீட்டுள்ளார்.
சிறுமியை குறித்த நபர் ஆற்றில் குதித்து மீட்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த குறித்த நபர், பாலம் ஒன்றுக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அலறல் சத்தம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைந்தபோது, சிறுமி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடுவதைக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாகத் தனது மேலாடையைக் கழற்றி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பையை ஓரமாக வைத்துவிட்டு, சிறுமியைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
பின்னர், தனது நண்பர்களின் உதவியுடன் கயிற்றைப் பயன்படுத்தி சிறுமியைப் பாதுகாப்பாகக் கரைக்கு மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி பின்னர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நலமுடன் குணமடைந்து வருவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற துல்லியமான இடம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.










