முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றில், மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்கள் அனைவரும் இந்த மனிதாபிமான வேண்டுகோளுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையர்களாகிய நாம் மதம், இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக நிற்கிறோம். எமது சக இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குவது குறித்து கருணையுடன் பரிசீலிக்குமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்” என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனத் ஜயசூரியவின் இந்த வேண்டுகோள், அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இலங்கையின் விளையாட்டுத் துறையிலிருந்தும் முக்கிய ஆதரவு கிடைத்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
கல்முனையைச் சேர்ந்த இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜன், இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றின் காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபிய சட்டத்தரணிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கமும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.










