இலங்கையின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஊழல் வழக்கு ஒன்று தொடர்பாக இடம்பெற்று வந்த தொடர் விசாரணைகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, இன்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஏ.எஸ்.பி.எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஏர்பஸ் ஊழல் வழக்கில், கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அவரது மரணம் இடம்பெற்றுள்ளது.
பொறியியலாளர் முதல் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வரை
கபில சந்திரசேன இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவனத் துறைகளில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்தார்.
தொழில்ரீதியாக ஒரு பொறியியலாளரான கபில சந்திரசேன, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். முன்னதாக ராஜபக்ச அரசாங்கத்தின் நிர்வாகத்தின் போது தொடங்கப்பட்டு, தற்போது செயல்படாத மலிவு விலை விமான நிறுவனமாக காணப்படும் “மிஹின் லங்கா”வின் தலைமை நிர்வாக அதிகாரியாக கபில சந்திரசேன பணியாற்றியுள்ளார்.
எனினும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அவர் பதவி வகித்த காலத்தில் நடந்த ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தமே, இறுதியில் அவரை ஒரு சர்வதேச ஊழல் விசாரணையின் மையத்திற்குக் கொண்டு வந்து விட்டது.
ஏர்பஸ் ஊழல் சம்பவம் என்பது என்ன?
ஏர்பஸ் ஊழலானது, முந்தைய ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட விமானக் கொள்முதல்களுடன் தொடர்புடையது.
என்பது உலகின் முன்னணி ஐரோப்பிய விமான மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான ஏர்பஸ் (Airbus), வணிக ரீதியான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது.
இந்த ஏர்பஸ் நிறுவனம் சம்மந்தமாக இங்கிலாந்தில் இடம்பெற்றுவந்த வழக்கொன்றில், விமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இலங்கை உட்பட பல நாடுகளில் பெருமளவு இலஞ்சம் கொடுத்ததாக, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் ஏர்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் உலகளவில் பாரிய சர்ச்சையை உருவாக்கியது.
சர்வதேச விசாரணைகளின்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட விமானக் கொள்முதல்கள் தொடர்பாக, இலங்கை இடைத்தரகு நிறுவனம் ஒன்று மில்லியன் கணக்கான டொலர்களை இரகசிய பணமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கபில சந்திரசேன 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சத்தைக் கோரிப் பெற்றதாக, இலங்கை புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியதாக சொல்லப்படுகின்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு ஆவணங்கள், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவர் ஒரே ஒரு இயக்குநராகவும் பங்குதாரராகவும் குறிப்பிடப்பட்டிருந்த “பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions)” என்ற நிறுவனத்தின் பெயரில், சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கணக்கிற்கு, Airbus SAS-இன் தாய் நிறுவனமான ஐரோப்பிய விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்திடமிருந்து (EADS) 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் பெறப்பட்டதாக, வெளிப்படுத்தியுள்ளன.
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியாவார்.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, சுமார் 363 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்ட இந்த நிதி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
இந்த விடயம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதை தொடர்ந்து, இது தொடர்பாக கபில சந்திரசேன முதலில் 2020 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர், இந்த வருடத்தின் மார்ச் 12-ஆம் திகதி, இலங்கை அதிக விலையில் ஏர்பஸ் விமானங்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக, இலஞ்சம் கோரியமை, இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கபில சந்திரசேனவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மீண்டும் கைது செய்தது.
அமெரிக்கத் தடைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு
பாரிய அளவில் இந்த விடயம் சர்ச்சையானதை தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு கபில சந்திரசேன மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த தடையானது இந்த வழக்கின் மீது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க வைத்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியபோது, அதிக விலையுள்ள ஏர்பஸ் கொள்முதல்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக கபில சந்திரசேன இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுத் துறை அவரை ‘கணிசமான ஊழல்’ குற்றச்சாட்டின் கீழ் பிரிவு 7031(c)-ன் கீழ் பகிரங்கமாக பெயரிட்டது.
இந்தத் தடைகள் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு, அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள்
ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி மூத்த அரசியல் பிரமுகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக கபில சந்திரசேன கூறியதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் ஏர்பஸ் மீதான விசாரணை தீவிரமடைந்தது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு 20 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது என, கபில சந்திரசேன கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, கபில சந்திரசேனவினால் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகிய இருவரையும் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பின்னர் சட்டத்தரணிகள் வெளியிட்ட ஒரு பிரமாணப் பத்திரத்தின் மூலம், கபில சந்திரசேன தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றார்.
கபில சந்திரசேனவின் சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தயாரித்த பிரமாணப் பத்திரத்தில், “இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் அளித்த தனது வாக்குமூலம் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தத்தின் கீழ் பெறப்பட்டதாக அவர் கூறினார். புலனாய்வாளர்கள் தன்னைக் கைது செய்வதாக அச்சுறுத்தியதாகவும், வாக்குமூலம் பதிவு செய்யப்படும்போது தனது வழக்கறிஞரை அணுக தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும்” அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கபில சந்திரசேனவின் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பகிரங்கமாக விரிவாகப் பதிலளிக்கவில்லை.
கைது பிடியாணைகள் மற்றும் விரிவடையும் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஷமிந்திர ராஜபக்ச, தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணைகளை பிறப்பித்தபோது இந்த விசாரணை மேலும் விரிவடைந்தது.
ஏர்பஸ் விசாரணை தொடர்பான நடவடிக்கைகளில் மேற்குறிப்பிட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதைத் தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அவர்கள் நாட்டிற்குள் நுழைந்தால் அவர்களைக் கைது செய்யுமாறு இலங்கை விமான நிலையங்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கபில சந்திரசேனவின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பான பிணை சர்ச்சை
கடந்த மார்ச் 12-ஆம் திகதி கைது செய்யப்பட்ட கபில சந்திரசேன, 54 நாட்களுக்குப் பிறகு கடந்த 5-ஆம் திகதி நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் நீதிமன்றம் பிணை வழங்கியதைத் தொடர்ந்து மற்றொரு சர்ச்சை எழுந்தது.
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றும்போது, தனது உறவினர்கள் என இருவரைப் போலியாக முன்னிலைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தலா 15,000 ரூபா பெற்றுக்கொண்டு போலிப் பிணையாளர்களாக நீதிமன்றத்தில் முன்னிலையானதாக கூறப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு கபில சந்திரசேனவை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும், பிணை வழங்கும் நடைமுறையின் போது கிராம அலுவலர் சான்றிதழ்கள் உட்பட சந்தேகத்திற்குரிய ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் பொலிஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்து மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் தான், இன்று வெள்ளிக்கிழமை கபில சந்திரசேன சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். (Minnal24News)