சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு இரு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேசத்தின் சுகாதாரத் தேவையை உணர்ந்து, அரசாங்கம் இந்த அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது இப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இரண்டு கட்டங்களாக இந்த புதிய கட்டிடப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக கிழக்கு மாகாண சபை 50 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
முதற்கட்டமாக, இந்த வருடம் 20 மில்லியன் ரூபாயும் இரண்டாம் கட்டமாக, அடுத்த வருடம் 30 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர,
”தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இன பேதம் கிடையாது. அதனைத் தாண்டி ‘இலங்கையர்’ என்ற ரீதியிலேயே நாம் ஆட்சி செய்கின்றோம். 30 வருட கால யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

இனிமேலும் நமக்கு ஒரு யுத்தம் தேவையில்லை. நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், கடந்த 22 வருடங்களாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த நிந்தவூர் கலாசார மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான முதற்கட்ட வேலைகளும் அண்மையில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.”
மேலும், கிழக்கு மாகாணத்தின் சுகாதார அபிவிருத்திக்காக கடந்த 2024ஆம் ஆண்டு 563 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டிற்காக அது 1246 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், இது கடந்த வருடங்களை விட இரு மடங்கு அதிகம் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், ஒரு வாரத்துக்கு முன்னர் டொலரின் பெருமதி 350 ரூபாவாக இருந்து தற்போது 320 ரூபாய் குறைவடைந்துள்ளது. இது சரியான பொருளாதாரத் திட்டங்களினால் ஏற்பட்ட விளைவாகும். எனவே மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு இந்த நாட்டில் இடமளிக்கப்படமாட்டாது. இப்போது ஊழல், வீண்விரயம் எதுவும் அரசு நிர்வாகத்தில் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச். ஈ. எம். டபிள்யூ. திசாநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார பிராந்திய பணிப்பாளர், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, தோப்பூர் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி, வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
