-மஸ்கெலியா நிருபர்-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நுவரெலியாவில் கிரேட் வெஸ்டன் (Great Western) மலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் குறித்த மர்மத்தை, மத்திய மாகாண சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது.
இறந்த பெண்ணின் கையில் இருந்த ‘மதுசங்க’ என்ற பச்சைக்குறியை வைத்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், அவர் தங்காலையைச் சேர்ந்த ஜுனைத் கிரிஷானி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொலைபேசித் தரவுகளை ஆய்வு செய்ததில், இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஹோமகமவைச் சேர்ந்த மகேஷ் அகலங்க டி சொய்சா (வயது 44) என்ற சந்தேக நபர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அலுத்கம பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கிரிஷானியின் அழுத்தத்தின் காரணமாக, சந்தேக நபர் அவரை சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி நுவரெலியாவிற்கு அழைத்து வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், கிரேட் வெஸ்டன் (Great Western) மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஜெர்சியைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தல பகுதியில் தனது முன்னாள் மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாரிடம் பிடிபடாமல் தப்பித்து வந்த இந்த நபர், பெண்களைக் கொல்வதையே வழக்கமாகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அடுத்த மாதம் 9ஆம் jpfதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.