-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றின் அறையில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் விடுதி அறையில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் பஸ்ஸார வீதி, நியூ வில்லேஜ் பகுதியைச் சேர்ந்த சந்தனி நிமாஷா (வயது 05) கசுன் மதுசங்க (வயது- 03) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் தங்களது தாயாரைப் பார்ப்பதற்காக, கடந்த 23ஆம் திகதி தந்தையுடன் மட்டக்களப்பிற்கு வந்திருந்த நிலையில் குறித்த விடுதியின் அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இவ்விரு சிறார்களும் அடர்த்தியான புகையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில், பிள்ளைகளின் தந்தை அவர்கள் தங்கியிருந்த அறையைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அவர் மீண்டும் அறைக்கு திரும்பிய போது, அறையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டுள்ளார்.
விடுதியின் ஊழியர்களின் உதவியோடு அறையினுள் புகை மூட்டத்திற்கு மத்தியில் இரு சிறார்களும் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதி ஊழியர்களின் உதவியுடன் அறையில் ஏற்பட்ட தீ உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும், தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
