உலக ஆமைகள் தினம் (World Turtle Day) மே 23ம் திகதி அனுசரிக்கப்படுகிறது.
ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும், இவை சுமார் 20 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன என சொல்லப்படுகின்றது. இவற்றின் உடல், ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் மூடப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
எனினும் ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இவ்வாறு அழிவிலிருந்து ஆமைகளை பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2000 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆமை மீட்பு நிறுவனம் ஒன்றினால் இத்தினம் முன்மொழியப்பட்டு, ஒவ்வொரு வருடமும் மே 23ம் திகதி உலக ஆமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
“இலங்கையில் கடலாமைகள்” பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியவை
உலகில் 7 வகையான கடலாமை இனங்கள் உள்ளன.
- பேராமை (Green Sea Turtle) : தாவரங்களை மட்டுமே உண்ணும் இந்த ஆமைகள், உலக வெப்பமண்டலக் கடல்களில் அதிகம் காணப்படுகின்றன.
- தோணியாமை (Leatherback Sea Turtle) : அனைத்துக் கடலாமைகளிலும் மிகப்பெரியது, இதன் ஓடு கடினமாக இல்லாமல், தோல் போன்று தடிமனாக இருக்கும்.
- அழுங்காமை (Hawksbill Sea Turtle) : இவை கூர்மையான அலகுகளைக் கொண்டவை, பவளப்பாறைகளில் வாழும் கடற்பஞ்சுகளை உணவாகக் கொள்கின்றன.
- சிற்றாமை/ஒலிவ் ரிட்லி (Olive Ridley Sea Turtle) : கடலாமைகளில் மிகச்சிறியவை மற்றும் அதிக எண்ணிக்கையில் காணப்படுபவை, இலங்கைக் கடற்கரைகளிலும் இவை முட்டையிட வருகின்றன.
- பெருந்தலைக் கடலாமை (Loggerhead Sea Turtle) : பெரிய தலை மற்றும் வலுவான தாடைகளைக் கொண்டவை, நண்டுகள் மற்றும் சிப்பிகளை உணவாக உட்கொள்கின்றன.
- கெம்ப்ஸ் ரிட்லி (Kemp’s Ridley Sea Turtle) : உலகின் மிக அரிதான மற்றும் சிறிய கடலாமை இனம், இவை முக்கியமாக அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படுகின்றன.
- தட்டை முதுகு ஆமை (Flatback Sea Turtle) : ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படும் பிரத்யேகமான இனம்.
இந்த 7 ஆமை இனங்களில் 5 வகை ஆமை இனங்கள் இலங்கை கடற்கரைகளை நாடி முட்டையிடுகின்றன. குறிப்பாக, தெற்கு மற்றும் தென்மேற்கு கரையோரப் பகுதிகளான கொஸ்கொட (Kosgoda), ஹிக்கடுவ (Hikkaduwa), பூந்தல (Bundala) மற்றும் ரிகாவ (Rekawa) ஆகிய இடங்களில் இவை அதிகளவில் காணப்படுகின்றன.
இலங்கைக் கடற்பரப்பில் காணப்படும் ஐந்து முக்கிய கடலாமை இனங்கள்
- பச்சை ஆமை (Green Sea Turtle)
- ஆலிவ் ரிட்லி ஆமை (Olive ridley sea turtle)
- அலுங்காமை (Hawksbill Turtle)
- தோணியாமை (leatherback sea turtle)
- பெருந்தலை ஆமை (Loggerhead sea turtle)
கடலாமை முட்டைகள் திருடப்படுவதைத் தடுக்கவும், காயமடைந்த ஆமைகளைப் பராமரிக்கவும் இலங்கையின் கரையோரங்களில் பல ஆமைப் பாதுகாப்பு மற்றும் குஞ்சு பொரிப்பகங்கள் (Hatcheries) இயங்கி வருகின்றன.
கொஸ்கொட கடலாமை பாதுகாப்பு திட்டம் (Kosgoda Sea Turtle Conservation Project)
இலங்கையின் காலி மாவட்டத்தில் அமைந்துள்ள கொஸ்கொட கடல் ஆமை பாதுகாப்புத் திட்டம், 1988-ஆம் ஆண்டு முதல் கொஸ்கொட கடல் ஆமை பாதுகாப்பு திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் முக்கிய சூழலியல் மையமாகும். இது அருகிவரும் கடல் ஆமை இனங்களைப் பாதுகாப்பதை முதன்மையாகக் கொண்டுள்ளது.
முட்டை பாதுகாப்பு: கடற்கரையில் தாயாமை இடும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக மணலில் புதைக்கப்பட்டு குஞ்சு பொரிக்கச் செய்யப்படுகின்றன.
பாதுகாப்பு மற்றும் விடுவிப்பு: குஞ்சுகள் பொரித்தவுடன் பாதுகாப்பாக நள்ளிரவிலோ அல்லது அதிகாலை நேரத்திலோ கடலுக்குள் விடப்படுகின்றன.
மீட்பு மற்றும் சிகிச்சை: மீன்பிடி வலைகளில் சிக்கி காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட ஆமைகள் மீட்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்படுகின்றன.
காலி வீதி, மஹபாலன, கொஸ்கொட என்ற இடத்தில் அமைந்துள்ள “கொஸ்கொட கடல் ஆமை பாதுகாப்பு மையத்தில்” பார்வையாளர்கள் ஆமைக் குஞ்சுகளைக் கையால் பிடித்து கடலில் விடலாம். மேலும் ஆமைகளின் வாழ்க்கை சுழற்சி மற்றும் பாதுகாப்பு முறைகளை நேரில் அறியலாம். நீங்கள் Tripadvisor அல்லது GetYourGuide போன்ற தளங்கள் மூலமாக சுற்றுப்பயண முன்பதிவுகளை மேற்கொண்டு இங்கு செல்லலாம், என தெரிவிக்கப்படுகின்றது.
ஹிக்கடுவ ஆமைப் பண்ணை (Sea Turtle Hatchery & Rescue Center)
இலங்கையின் தென் கடற்கரை நகரமான ஹிக்கடுவயில் அமைந்துள்ள இந்த ஆமை பண்ணைகள், அழிந்து வரும் கடல் ஆமைகளைப் பாதுகாக்கவும், காயமடைந்த ஆமைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் செயல்படுகின்றன.
இந்த பண்ணை காலி வீதி (A2 Main Road), ஹிக்கடுவ காலியிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மீனவர்களிடம் இருந்து முட்டைகளை வாங்கிப் பாதுகாப்பாக அடைகாப்பது, குஞ்சுகளை வளர்த்து நள்ளிரவு அல்லது அதிகாலை வேளையில் கடலில் விடுவது போன்ற பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்த ஆமை பண்ணையில் ஆமைகளை பார்வையிடலாம்
இங்கு ஆமைகளின் வாழ்க்கை சுழற்சியை அறியலாம், மேலும், நீங்கள் விரும்பினால் குஞ்சு ஆமைகளை உங்கள் கைகளில் ஏந்தி கடலில் விடும் அனுபவத்தையும் பெறலாம்.
ரெக்காவ ஆமை சரணாலயம் (Turtle Watch Rekawa)
இலங்கையின் தெற்கே தங்காலை அருகே அமைந்துள்ள “ரெகாவ ஆமை சரணாலயம்” புகழ்பெற்ற கடல் ஆமை சரணாலயம் மற்றும் பாதுகாப்பு திட்டமாகும். இயற்கை சூழலில் ஆமைகள் முட்டையிடுவதை (Nesting) இரவில் பார்வையிட சிறந்த இடமான இது, அங்குள்ள கடற்கரை சமூகத்தினரால் வெற்றிகரமாக நிர்வகிக்கப்படுகிறது.
தங்காலையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள ரெக்காவ கடற்கரையில் (Rekawa Beach) இது அமைந்துள்ளது.
ஆலிவ் ரிட்லி, லெதர் பேக், கிரீன் டர்ட்டில் மற்றும் ஹாக்ஸ்பில் போன்ற அரிய வகை ஆமை இனங்களை, தினமும் இரவு 08:30 மணி முதல் நள்ளிரவு வரை பார்வையிடலாம்.
ஆமைகள் முட்டையிடும் உச்ச பருவமாக கருதப்படும், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்கள் இவற்றை பார்வையிட சிறந்த காலப்பகுதியாகும்.
முட்டையிடும் ஆமைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக ஒளிரும் விளக்குகள் (flashlights) மற்றும் / பிளாஷ் கேமராக்களுக்கு (flash Camera) இங்கு அனுமதி இல்லை.
முன் பதிவு (Advance booking) தேவையில்லை, பார்வையாளர் மையத்தில் நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளூர் வழிகாட்டிகளுடன் செல்லலாம்.
இந்த திட்டத்தின் முழுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டண விவரங்களை அறிய Turtle Conservation Project – Rekawa இணையதளத்தைப் பார்வையிடலாம்
இலங்கையில் கடலாமைகள் அருகுவதற்கான காரணங்கள்
- இறைச்சிக்காக வேட்டையாடுதல்
- ஓடுகளினை விற்பனை செய்வதற்காக பிடிக்கப்படுகின்றது.
- முருகைக்கல் அழிவு
- கரையோர மண் அகழ்வு
- கரையோர அபிவிருத்தி நடவடிக்கைகள்
- கடல் மாசடைதல்
- கடல் மட்ட அதிகரிப்பு
- வெப்பநிலை அதிகரிப்பு
கடலாமைகள் தொடர்பான விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, இலங்கை கடலோரக் காவல்படையினரும் (Sri Lanka Coast Guard – SLCG), வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களமும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Minnal24News)