20 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த, இளம் தாய் ஒருவரும், அக்குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணும் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 25 வயதுடைய இளம் தாயிடம் பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குடும்பத்தில் நிலவிய கடுமையான பொருளாதாரக் கஷ்டம் மற்றும் வறுமை காரணமாகவே தான் பெற்ற குழந்தையை விற்கத் துணிந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இக்குழந்தையை விலைக்கு வாங்கிய பெண், திருமணம் முடிந்து 18 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர் என்பது பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத ஏக்கத்தில், சட்டவிரோதமான முறையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி, ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது நீதிமன்ற அனுமதியுடன் கடுமையான சட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
எனினும், அத்தகைய எந்தவொரு சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல், சட்டத்திற்கு முரணான வகையில் பணப் பரிமாற்றம் செய்து இக்குழந்தை கைமாற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதக் குழந்தை விற்பனை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் குழந்தையைப் பெற்ற தாயும், அதனை விலைக்கு வாங்கிய பெண்ணும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.