பருவகாலம் என்பது இயற்கையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் குறிக்கிறது. பூமி சூரியனைச் சுற்றும் விதமும், அதன் சாய்வும் காரணமாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காலநிலைகள் உருவாகின்றன. இதுவே பருவகாலங்களாக அழைக்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் – இயற்கையின் அழகை தன்னகத்தே தாங்கி நிற்கும் ஒரு சிறிய தீவு நாடு. ஆனால், இந்நாட்டின் காலநிலை இன்று மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது. முறையற்ற பருவகால மழையும், மிதமான வெப்பமும் இன்று கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
பொதுவாக, உலகின் பல பகுதிகளில் நான்கு முக்கிய பருவகாலங்கள் காணப்படுகின்றன: வசந்த காலம், கோடைகாலம் , இலையுதிர் காலம், மாரிகாலம். ஆனால் இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளில், மாரிகாலம் மற்றும் கோடை காலம் என்ற இரண்டு முக்கிய பருவங்கள் அதிகம் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுகின்றன.

பருவகாலங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தங்கள் வாழ்வியல் முறைகள், உடை, உணவு பழக்கங்கள் ஆகியவற்றை பருவத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனர். விவசாயம், சுற்றுச்சூழல், விலங்குகள் அனைத்தும் பருவகால மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன.
மேலும், பருவகாலங்கள் இயற்கையின் அழகையும் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பருவமும் தனித்துவமான அனுபவத்தையும், காட்சியையும் வழங்குகிறது.
பருவகாலம் என்பது இயற்கையின் சுழற்சியில் முக்கியமான ஒரு பகுதி. இது மனித வாழ்க்கையையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வாகும். இது தற்போது இலங்கையைப் பொறுத்தவரை கோடை காலமாக காணப்படுகிறது.
இயற்கையின் பருவகாலமான கோடைகாலத்தில் காலை நேரத்தில் சூரியன் மெதுவாக உதிக்கும் போது, அதன் ஒளி நிலத்தைக் குளிர்ச்சியுடன் வருடும். ஆனால் மதியம் வரும்போது, அதே சூரியன் தீப்பொறி போல காய்ச்சத் தொடங்குகிறது. மக்கள் நிழலைத் தேடி அலைகின்றனர். ஒரு சில பகுதிகளில் வெப்பம் அதிகரித்து, தினசரி வாழ்க்கையே சவாலாக மாறியுள்ளது.
அதுவே, இயற்கையின் மற்றொரு பருவகாலமான மாரி காலத்தில். சில நாட்களில் வானம் திடீரென கருமேகங்களால் மூடப்பட்டு, கனமழை பொழிகிறது. சாலைகள் நீரால் நிரம்பி, ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. சில நேரங்களில் இந்த மழை மகிழ்ச்சியைக் கொடுக்காமல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களையும் உருவாக்குகிறது.
விவசாயிகளுக்கு இந்த மாற்றங்களை விளங்கிக் கொண்டு அதற்கேற்ப செயற்பட முடிகின்றது. சில வேளைகளில் அவர்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் பருவகாலம் மாறுவதால், பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. ஒருபுறம் வறட்சி, மறுபுறம் அதிக மழை – இவை இரண்டும் விவசாய வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன.
இவை அனைத்திற்கும் பின்னால் இருக்கும் முக்கிய காரணம் காலநிலை மாற்றம். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இலங்கையையும் விட்டு விலகவில்லை. ஆனால் இதை சமாளிக்க நம்மால் முடியாதது அல்ல. மரங்களை நட்டல், இயற்கையை பாதுகாத்தல், வளங்களை சிக்கனமாக பயன்படுத்தல் போன்ற சிறிய முயற்சிகள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
வெயில் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்
வெயில் காலம் வந்துவிட்டால், உடலில் வெப்பம் அதிகரித்து சோர்வு, தாகம், நீர்ச்சத்து குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகையால், இந்த காலத்தில் நாம் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கங்கள் மிகவும் முக்கியமானவை.
முதலில், அதிக அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு, இளநீர், பழச்சாறுகள் போன்ற இயற்கையான பானங்களைப் பருகுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
வெயில் காலத்தில் இலகுவான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். பதிலாக காய்கறிகள், பழங்கள், சாலட் போன்ற சத்தான மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை தேர்வு செய்யலாம்.
தர்பூசணி, வெள்ளரி, பப்பாளி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இவை உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், சக்தியையும் வழங்குகின்றன.
மேலும், அதிக வெப்பத்தில் உடல் உப்புச் சத்தையும் இழக்கிறது. அதனால், சிறிதளவு உப்பு கலந்த பானங்கள் அல்லது இயற்கை உணவுகள் உட்கொள்வது உடல் சமநிலையை பேண உதவும்.
காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது மிகவும் முக்கியம். உடல் சோர்வடையாமல் இருக்க இது உதவும். அதேபோல், ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், சிறு அளவில் பல முறை உணவு உட்கொள்வது நல்லது.
வெயில் காலத்தில் சரியான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது உடல்நலத்தை பாதுகாக்க உதவும். தண்ணீர், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகப்படுத்தி, கடினமான உணவுகளை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமாக இந்த வெயில் காலத்தை கடக்கலாம்.