உலக பூமி தினம் (Earth Day) இன்று புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இம்முறை “நமது சக்தி – நமது பூமி” (Our Power – Our Planet) என்பது இதன் உலகளாவிய தொனிப்பொருளாகும்.
2026 ஆம் ஆண்டில் நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு மத்தியில், காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் இழப்பு, தொழில்துறை கழிவுகள் குவிதல் மற்றும் காடழிப்பு போன்ற சிக்கலான பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன.
முதன்முதலில் 1970 ஏப்ரல் 22 அன்று அமெரிக்காவில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்க செனட்டரும் சூழலியலாளருமான கேலார்ட் நெல்சன் என்பவரால் முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தினம், பின்னர் உலகம் முழுவதும் பரவி, இன்று 193 நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் கொண்டாடப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பெயரிடப்பட்ட இந்த தினம், “பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்வையும் உறுதி செய்யும் ஒரு அமைப்பாகப் பூமியைக் கருதுவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் அதிகப்படியான வள நுகர்வு காரணமாக ஏற்பட்ட காற்று மற்றும் நீர் மாசுபாட்டினால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களைத் தவிர்க்க மக்கள் அணிதிரண்டமையே இந்த தினம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.