நாட்டில் இரத்தப் புற்றுநோய் (Cancer) சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplant) நிபுணர்களுக்கு, கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சிரேஷ்ட வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
பயிற்சி பெற்ற நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மிகவும் சிக்கலான புற்றுநோய் சிகிச்சைக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, நாட்டின் சுகாதார அமைப்பு திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம புற்றுநோயியல் வைத்தியசாலையின், இரத்தப் புற்றுநோய் பிரிவின் தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 இரத்தப் புற்றுநோயாளர்கள் புதிதாகப் பதிவாகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது இரத்தப் புற்றுநோயுடன் வாழும் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 15,000 முதல் 18,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளிகளில், சுமார் 1,500 முதல் 2,000 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சைக்கு, உயர் சிறப்பு மருத்துவ நிபுணத்துவம் மற்றும் நிலையான சுகாதார கட்டமைப்பு தேவைப்படுகிறது.
இரத்தப் புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான சிகிச்சையை, நாடு முழுவதும் தற்போது வெறும் நான்கு வைத்திய நிபுணர்கள் மாத்திரமே கையாள்வதாக, விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் புத்திக சோமவர்தன தெரிவிக்கின்றார்.
இந்த நால்வரில், வைத்தியர் புத்திக சோமவர்தன உட்பட 3 வைத்திய நிபுணர்கள், மஹரகம புற்றுநோயியல் வைத்தியசாலையில் பணியாற்றுகின்றனர்
மீதமுள்ள ஒரு வைத்திய நிபுணர், கண்டி தேசிய வைத்தியசாலையில் பணியாற்றுகிறார்.
பயிற்சி பெற்ற பல வைத்தியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், இந்த பற்றாக்குறை மேலும் மோசமடைந்துள்ளதாக, விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் புத்திக சோமவர்தன எச்சரித்தார்.
இரத்தப் புற்றுநோய்கள் மற்றும் அது தொடர்பான நோய்களுக்கான சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது, என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
ஆகவே, இத்தகைய சிகிச்சைக்கு மேம்பட்ட மருத்துவ வளங்கள், திறமையான நிபுணர் குழுக்கள் தேவைப்படுவதுடன், அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான சிக்கல்கள் காரணமாக, இலங்கையில் சிகிச்சையை தொடங்கினாலும், பல நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இவர்கள் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்படுகின்றனர்.
2022 ஆம் ஆண்டின் தேசிய தரவுகளின்படி, இலங்கையில் 35,855 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகினர். அவர்களில் சுமார் 5,400 பேர் இரத்தப் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள்.
சிறப்புப் பயிற்சி விரிவுபடுத்தப்படாமலும், சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படாமலும் இருந்தால், நோயாளிகளின் தேவைகளுக்கும் கிடைக்கக்கூடிய சிகிச்சைக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தீவிர புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய அதிஉயர் கவனிப்பின் முக்கியத்துவத்தை, ஆலோசக இரத்தவியல் நிபுணர் (Haemato-oncologist) வைத்தியர் நிலுபுலி குணரத்ன வலியுறுத்தினார்.
தீவிர புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகள், 10 மில்லியன் ரூபா முதல் 20 மில்லியன் ரூபா வரை இருக்கலாம் என்பதையும், வைத்தியர் நிலுபுலி குணரத்ன சுட்டிக்காட்டினார்.
சிகிச்சைக்குப் பின்னர் முறையான கவனிப்பு மற்றும் பராமரிப்பை மேற்கொள்ளத் தவறினால், கடுமையான மற்றும் உயிருக்கே ஆபத்தான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கிறார்.
சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளின் நோயெதிர்ப்பு மண்டலங்கள் பலவீனமடைவதால், அவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள், என்றும் அவர் மேலும் கூறினார்.
இதன் விளைவாக, நோய்த்தொற்றுகள் மற்றும் பிற மருத்துவ அபாயங்களைத் தடுக்க, மேம்பட்ட கண்காணிப்பு அவசியமாக இருக்கின்றது.
இப்படியான நிலையில், தற்போது இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த இரத்தப் புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சையளிப்பதற்காக நாடு முழுவதும் வெறும் நான்கு விசேட மருத்துவ நிபுணர்கள் மாத்திரமே பணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே, சிக்கலான புற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நோயாளிகளைப் பாதுகாக்க வேண்டுமானால், இலங்கை சிறப்புப் பயிற்சியை அவசரமாக வலுப்படுத்த வேண்டும், திறமையான மருத்துவ நிபுணர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் சிகிச்சைத் திறனை விரிவுபடுத்த வேண்டும், என்று வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.