மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு சிறுவர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.
பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்று அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது.
இச்சம்பவம் நடந்த வேளையில், குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகளின் தந்தை, அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையைப் பூட்டிவிட்டு வெளியில் உணவு வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அவர் வெளியில் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தந்தை வெளியில் சென்றிருந்த நேரத்தில், விடுதி அறையிலிருந்த மெத்தை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அறை முழுவதும் அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
அறை பூட்டப்பட்டிருந்த நிலையில் அந்த நச்சுப் புகையை சுவாசித்தமையால், ஏற்பட்ட கடுமையான மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தைகள் இருவரும் அறையினுள்ளேயே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கினறனர்.
இந்த விபத்து குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

