இலங்கையில் இன்றைய நாட்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அமைதிக்கான நடைப்பயணம். இதற்காக ஒரு தேரர் தலைமையிலான துறவிகள் குழுவினரும், அவர்களுடன் ஒரு நாயும் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்த குழுவை தலைமை தாங்கி வந்திருக்கும் பஞ்ஞாகர தேரர் யார்? அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ள நாய் எங்கிருந்து வந்தது?
வண.பஞ்ஞாகர தேரர் (Ven.Pannakara Thero)
ஹுவாங் டூ அறக்கட்டளையை (Hương Tú Charity) நிறுவியவரும், தம்மசேத்தியா (Dhammacetiya) திட்டத்தைத் தொடங்கியவரும், “ஒரு பௌத்த துறவியின் காலடித் தடங்கள்” (Footsteps of a Buddhist Monk) என்ற நூலின் ஆசிரியரும், அமைதிக்கான நடைப்பயணத்தை தலைமை தாங்கி முன்னெடுத்து செல்பவருமான, வியட்நாமைச் சேர்ந்த 44 வயதான பௌத்த துறவி வண.பஞ்ஞாகர தேரர், இன்று இலங்கையில் தனது அமைதிக்கான பயணத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறார்.
1981 ஆம் ஆண்டு, வியட்நாமின் டாக் லாக் (Dak Lak) நகரில் பிறந்தார் லாம் வான் நுயென் (Lam Van Nguyen). 1997 ஆம் ஆண்டு குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
ஆர்லிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் (University of Texas at Arlington), தகவல் தொழில்நுட்ப பொறியியலில் பட்டம் பெற்ற லாம் வான் நுயென், ஒரு சிறந்த பொறியியலாளராக பணியாற்றினார்.
நல்ல கல்வி, நல்ல வேலை, சிறந்த வாழ்க்கை என அனைத்தும் இருந்தும், லாம் வான் நுயென்னின் மனம் எதிலும் நாட்டமில்லாது ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருந்தது.
அப்போது லாம் வான் நுயென், வணக்கத்திற்குரிய காந்திதம்மோ பாப் நானை (Venerable Khantidammo Pháp Nhân) சந்தித்து, அவரின் வழிகாட்டுதலின் கீழ், டெக்சாஸில் உள்ள லியன் ஹோவா (Liên Hoa Temple) விகாரையில், பௌத்த இளைஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றினார்.
2007-ஆம் ஆண்டு, டெக்சாஸின் ஃபோர்ட் வெர்த்தில் (Fort Worth) உள்ள ஹுவாங் டாவோ விகாரையில் வணக்கத்திற்குரிய ரத்தனகுண பூ டக் (Venerable Ratanaguna Bửu Đức) தேரரின் கீழ், அவர் ஒரு தொடக்கநிலை துறவியாகத் தீட்சை பெற்று, துவே நியான் (Tuệ Nhân) என்ற துறவறப் பெயரைப் பெற்றார்.
2010-ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமியின் போது அவர் முழுமையான துறவற தீட்சை பெற்றார்.
2013 ஆம் ஆண்டில், வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர், ஹுவாங் டாவோ விகாரையின் துணை மடாதிபதியாகவும் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவர், உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்குச் சேவை செய்வதற்காக, ஹுவாங் டூ (Hương Tư) அறக்கட்டளையை நிறுவினார்.
இந்த அறக்கட்டளையின் மூலம், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் உள்ள பல நாடுகளில் மனிதாபிமானப் பணிகள் சென்றடைந்துள்ளன.
இந்த முயற்சிகளில், உகாண்டாவில் உள்ள குழந்தைகளுக்காக சுத்தமான குடிநீர் கிணறுகளையும் பாடசாலைகளையும் நிர்மாணித்தல், தொலைதூர கிராமங்களுக்குக் கல்வி மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குதல் மற்றும் தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம், புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேரிடர் நிவாரணம் வழங்குதல் ஆகியவை உள்ளடங்கும்.
பேரிடர் நிவாரணத்தில் உணவு, மருந்து, தங்குமிடம் மற்றும் நீண்டகால மீட்பு உதவி ஆகியவை அடங்கும்.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தனது குருவின் ஆசியுடன், வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் “தம்மசேத்தியா” (Dhammacetiya) திட்டத்தைத் தொடங்கினார்.
(தம்மசேத்தியா திட்டம் என்பது, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வெர்த் நகரில் அமைந்துள்ள, ஹுவாங் டாவோ பௌத்த கோயிலின் 14 ஏக்கர் நிலப்பரப்பில், “பண்டைய புனித பௌத்த நூல் தூபிகளை” அமைப்பதற்கான ஒரு மாபெரும் கட்டமைப்பாகும். புத்தரின் போதனைகளை இனிவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பாதுகாக்கும் நோக்கத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதப்பட்ட பௌத்த நூல்களை கொண்ட கருங்கல் தூபிகள் காணப்படுகின்றன)
2022 முதல் 2023 வரை, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் சுமார் 100 துறவிகளுடன் நடைப்பயணத்தை ஆரம்பித்தார். அவர்கள் 112 நாட்கள், இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் கால்நடையாகப் பயணம் செய்து, புத்தரின் புனித பூமிகள் வழியாக 3,400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்தனர்.
அவர்கள் மூன்று ஆடைகளையும், ஒரு பிச்சைப் பாத்திரத்தையும் மட்டுமே சுமந்து, திறந்த வானத்தின் கீழ் உறங்கி, செல்லும் இடங்களில் மக்கள் கொடுத்த உணவுகளை உண்டு வாழ்ந்தனர்.
இந்த நீண்ட நடைப் பயணம், பிற்காலத்தில் அவர் எழுதிய “ஒரு பௌத்த துறவியின் காலடித் தடங்கள்” என்ற நூலுக்கு அடித்தளமாக அமைந்தது என சொல்லப்படுகின்றது.
வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர், இப்போது அமைதிக்கான நடையை (Walk for Peace) வழிநடத்துகிறார்.
இது அமைதி, கருணை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு சொல்லும் 2,300 மைல் தூர நடைப் பயணமாகும்.
…………………………….
அலோகா (Aloka) என்ற அமைதியின் நாய்
“அலோகா” என்றால் ஒளி என்று அர்த்தம் (இது பண்டைய இந்தோ-ஆரிய மொழிகளான பாலி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குரிய சொல்லாகும்)
வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்துடன், நெற்றியில் வெள்ளை நிறத்திலான இதய வடிவத்துடன், கொல்கத்தா நகரில் தெருவோரங்களில் வசித்த ஒரு சாதாரண Indian Pariah நாய், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாளில் வண.பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஒரு துறவிகள் குழுவை காண்கிறது.
இந்தியா முழுவதும் சமாதானத்திற்கான நடைப்பயணம் மேற்கொண்ட, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவியான வண.பஞ்ஞாகர தேரர் தலைமையிலான துறவிகள் குழுவை பின்தொடர்ந்து, தானும் நடக்கிறது இந்த தெருநாய்.
துறவிகள் குழுவினரின் பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் இந்த தெருநாய் தனது சிறிய கால்களால் அவர்களை பின்தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.
அது வலியால், நோயால், களைப்பால் சோர்ந்து விடவில்லை. தனது பயணத்தை துறவிகளுடன் தொடர்ந்தது.
இதை அவதானித்த வண.பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட குழுவினரால் அந்த நாய் தத்தெடுக்கப்பட்டு, அதற்கு “அலோகா” என பெயரிடப்பட்டது. இப்படி தான் ஒரு தெருநாய் “அலோகா” என்ற சமாதானத்தின் புனித ஜீவனாக மாறியது.
அதன்பின்னர் தேரர்கள் அலோகாவை தம்மோடு அமெரிக்கா அழைத்து செல்கிறார்கள்.
“Walk for Peace” என்ற அமைதிப் பயணத்தின் மூலம் உலகம் முழுவதும் அலோகா பிரபலமானது.
வண.பஞ்ஞாகர தேரர் தலைமையிலான பௌத்த துறவிகள் குழு, 108 நாட்களில் அமெரிக்கா முழுவதும் 2300 கிலோமீட்டர் நடைபயணம் செய்தனர். அதில் அலோகாவும் இணைந்து கொண்டது.
அலோகா சமாதானத்தை போதிக்கவில்லை, அதற்கு மொழி இல்லை, ஆனால் அதன் நான்கு கால்களும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக விடாது நடந்து கொண்டு இருக்கிறது.
“நாம் எதை செய்தாலும் சலிக்காமல் தொடர்ச்சியாக அதை செய்து கொண்டு இருக்க வேண்டும். தடைகள் வரும் போது துவண்டு விடாது நமது செயற்பாடுகளை தொடர்ந்தால், அதற்குரிய மாபெரும் பலனை ஒரு நாள் உலகம் நமக்கு தரும்” என்பதே அலோகா மனிதர்களுக்கு உணர்த்தும் படிப்பினையாக இருக்கிறது.
…………………………….
இலங்கையில் அமைதிக்கான நடைப்பயணம்
வண.பஞ்ஞாகர தேரர் மற்றும் அலோகா உள்ளிட்ட குழுவினரின் அமைதிக்கான பயணம், இன்று ஏப்ரல் 22 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.
“ஏஹிபஸ்ஸிகோ” (Ehipassiko) என அழைக்கப்படும் இந்த அமைதி நடைப்பயணம், தம்புள்ளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பன்னாகர தேரர் தலைமையில், புனிதப் பொருட்கள் மற்றும் போதி மரக்கன்றுகளை ஏந்தி, நல்லிணக்கம் மற்றும் அன்பை வலியுறுத்தி, இந்தப் பயணம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 22 : தம்புள்ளை – மாத்தளை
ஏப்ரல் 23 : கண்டி
ஏப்ரல் 24 : கண்டி (தலதா மாளிகை) – கடுகண்ணாவை
ஏப்ரல் 25 : பெலிகம்மன
ஏப்ரல் 26 : தொலங்கமுவ
ஏப்ரல் 27 : யக்கல – களனி ராஜமஹா விகாரை
ஏப்ரல் 28 : கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவு
இந்த நடைப்பயணத்திற்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுமையான ஆதரவு வழங்கியுள்ளதுடன் மற்றும் அரச அனுசரணை வழங்கப்பட்டுள்ளது. (Minnal24News)