இலங்கையின் கறுவா தொழில்துறை மூலம் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 185 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இது இலங்கை ரூபாவில் சுமார் 6,000 கோடி ரூபாவாகும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் கறுவா தொழில்துறையின் மூலம் 10,000 கோடி ரூபா வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கறுவா தொழில்துறைக்கு ரூ.36.5 கோடி ஒதுக்கீடு
கறுவா தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், கறுவா அபிவிருத்தித் திணைக்களத்திற்கு விவசாய அமைச்சினால் 365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் பாரம்பரியமற்ற பிரதேசங்களில் புதிதாக 2,500 ஏக்கர் கறுவா பயிர்ச்செய்கையை ஆரம்பித்தல், கறுவா சார்ந்த பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திக் கைத்தொழில்களை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், கறுவா தொழில்துறைக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் இத்துறையில் தொழில்முனைவோர் அபிவிருத்தியை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கையின் கறுவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேலும் மேம்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.










