திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கு பதிவு ஏட்டினை திருடிய சந்தேக நபரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயது உடையவர் என தெரிய வருகின்றது.
நிலம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, வழக்கு ஏட்டினை மாவட்ட நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதிவாளருடன் காணப்பட்ட முரண்பாடு காரணமாக, பதிவாளரை பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவு ஏட்டினை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன், குறித்த சந்தேக நபருக்கு உடந்தையாக இருந்த தட்டெழுத்தாளரான 30 வயதுடைய பெண்ணை, 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது