கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிராகரித்துள்ளார்.
அரசாங்கம் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) மகளிர் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை பதுளையில் நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி, நீதித்துறையின் இறுதித் தீர்மானங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும், அவற்றை மாற்றியமைக்க நிறைவேற்று அதிகாரம் தலையிடும் என எவரும் எதிர்பார்க்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
சட்டங்களை இயற்றும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு இருப்பதாகவும், பொலிஸார், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு போன்ற நிறுவனங்கள் விசாரணைகளையும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி விளக்கினார்.
எனினும், சட்டத்தைப் பொருள் விளக்குவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் இறுதி அதிகாரம் நீதித்துறைக்கே, குறிப்பாக உயர் நீதிமன்றத்துக்கே இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
“உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியதும், அதனை நீக்குமாறு சிலர் கூச்சலிடத் தொடங்குகின்றனர். இவ்வாறான சட்டங்களுடன் ஒரு நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும்?” என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளே சட்டம் தொடர்பான அதிகாரபூர்வமான தீர்மானங்கள் என அரசாங்கம் கருதுவதாகவும், அவற்றுக்கு அமைவாகச் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம்” என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டுமெனப் பல பௌத்த பிக்குகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஜனாதிபதியின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அந்த மன்னிப்பைச் செல்லுபடியற்றதாக்கியது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு ஒக்டோபர் 5ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தேரரை விடுதலை செய்யக் கோரி பல்வேறு குழுக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. கொழும்பில் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டமும் அவற்றில் ஒன்றாகும்.
இந்நிலையில், ஜனாதிபதியின் தற்போதைய கருத்துகள், இந்த விவகாரத்தில் தலையிட அவர் விரும்பவில்லை என்பதை இதுவரை வெளிப்படுத்தியுள்ள மிகத் தெளிவான நிலைப்பாடாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என அவர் நேரடியாக அறிவிக்கவில்லை.
இதேவேளை, சட்டத்தை மீறிச் செயற்படுவதற்கான அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார் என்றும், ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கமாட்டார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்ட முறைமையைச் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றை உருவாக்குவதே நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.










