எதிர்ப்புகளின்றி ஏகமனதாக வென்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவுசெலவுத்திட்டம்

 

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த 58 வது பொதுச்சபை அமர்வு அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்ற போது, பிரதேச சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏகமானதாய் அங்கீகரிக்கப்பட்டது.

தேசிய காங்கிரசின் சார்பில் தவிசாளர், உப தவிசாளர் அடங்களாக ஐந்து உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இரண்டு உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 08 உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த சபையின் வரவு செலவுத்திட்டம் இம்முறையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தேசிய காங்கிரஸ் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மது முகைதீன் முஸம்மில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினர் ஆதம் லெவ்வை நாஜிட் மீரா லெவ்வை ஆகிய உறுப்பினர்களை எது வித கட்சி பேதங்களும் இல்லாமல் பட்டியடிப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் வைத்து பிரார்த்தனை முடித்த கையோடு பிரதேச சபை நோக்கி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் சகிதம் பள்ளிவாசலினுடைய தலைவர், நிர்வாகிகள் கட்சி ஆதரவாளர்கள் இ பொதுமக்கள் கலந்து சிறப்பித்ததோடு, பிரதேச சபை வளாகத்தில் வைத்து சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டு சபை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உறுப்பினர்களின் வரவுசெலவு மீதான உரையில் கடந்த சபை அமர்வுடன் விடைபெற்ற சபது அஹமட் சியான் (தே.கா.), முகம்மது மையதீன் நஜீப் (அ.இ.ம.கா) ஆகியோரின் சேவைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சிலாகித்து பாராட்டினர்.