நாடு முழுவதும் பொலிஸாரின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், உள்ளூர் சந்தையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200 ஒற்றை வண்டியறை (Single-Cab) வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை பொலிஸாருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2026 பெப்ரவரி 23ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டதாகவும், உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து ஏழு விலைமனுக்கள் கிடைத்ததாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விலைமனுக்கள் உயர்மட்ட கொள்வனவுக் குழுவினால் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறைந்த விலையில் முன்வைக்கப்பட்டு, தேவையான நிபந்தனைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்த விலைமனுதாரராக டீசல் அண்ட் மோட்டார் எஞ்சினியரிங் பிஎல்சி (DIMO) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைய, ஒரு வாகனத்தை 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா வீதம் (பெறுமதி சேர் வரி – VAT தவிர்த்து), மொத்தம் 200 TATA Yodha Single-Cab Pickup வாகனங்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.










