எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய விலை சூத்திரத்தின்படி, விலை அதிகரிப்பு 4 சதவீதம் என்ற எல்லையை எட்டவில்லை என்பதால், கட்டணங்களை உயர்த்த முடியாது எனத் தெரிவித்தார்.
எனினும், தற்போது பேருந்து தொழிலை நஷ்டத்திலேயே நடத்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறுகிய தூர சேவைகளில் நாளொன்றுக்கு 1,000 ரூபாவும், நெடுந்தூர சேவைகளில் நாளொன்றுக்கு 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “டீசல் விலை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது. தற்சமயம் டீசல் லீற்றர் ஒட்டுமொத்தமாக 15 ரூபாயால் அதிகரித்துள்ளது. இது பேருந்து தொழிலுக்குப் பாரிய நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது.
எனினும், கொள்கை ரீதியான தீர்மானத்தின்படி, விலை சூத்திரத்தின் அடிப்படையில் 4 சதவீத நிலையை அடைந்தால் மட்டுமே எங்களால் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடியும். தற்போதைய நிலையில் அந்த 4 சதவீத வீதம் எட்டப்படவில்லை.
எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்த சட்டரீதியாக எங்களுக்கு அதிகாரம் இல்லை. எவ்வாறாயினும், தற்போதைக்கு நாங்கள் இந்தப் பேருந்து தொழிலை நஷ்டத்துடனேயே கொண்டு செல்ல வேண்டியுள்ளது” என்றார்.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 397 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: 392 ரூபா)
லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 543 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது (முந்தைய விலை: 528 ரூபா)
பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 424 ரூபாயாக பதிவாகியுள்ளது (முந்தைய விலை: 414 ரூபா)
பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: 475 ரூபா)
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, லீற்றர் ஒன்று தொடர்ந்து 285 ரூபாய் என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இணையாக உயர்த்தியுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எவ்வாறாயினும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டு 570 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
இதுதவிர அண்மையில் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று மாற்றமின்றி 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.










