நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) முன்கூட்டியே அறிவிக்காமலும், அதன் அனுமதி அல்லது இணக்கப்பாட்டைப் பெறாமலும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகச் செய்திகள் மூலமாகவே தமக்கு தகவல் கிடைத்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா உற்பத்தியாளர்கள் எவரும் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிகாரசபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, விலை அதிகரிப்புக்கான காரணம் மற்றும் அதிகரிக்கப்பட்ட விலை தொடர்பான விபரங்களைக் கோரி, உற்பத்தியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அதிகாரசபை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், கோதுமை மா கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு முன்னர் உற்பத்தியாளர்கள் அதிகாரசபையுடன் கலந்தாலோசித்து, இணக்கப்பாட்டை எட்ட வேண்டியது அவசியமாகும்.
சட்ட விதிமுறைகளை மீறி அதிகரிக்கப்பட்ட விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் பதில்களைப் பரிசீலித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.










