2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, ஆசிரியர்களின் ஆரம்பச் சம்பளம் 65,000 ரூபாவாகவும், மருத்துவர்களின் ஆரம்பச் சம்பளம் 94,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நிக்கவெரட்டியவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அரச சேவைகளை மக்களுக்கு வினைத்திறனுடன் வழங்குவதற்கும் அரச சேவையை வலுப்படுத்துவது அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 121,000 புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இந்த ஆட்சேர்ப்புகள் அரசியல் நியமனங்கள் மூலம் மேற்கொள்ளப்படாமல், போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஊடாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கிராம உத்தியோகத்தர்கள், பிரிவேனா நிறுவனங்கள் மற்றும் ஆசிரியப் பயிலுநர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு வலுவானதும் வினைத்திறனானதுமான அரச சேவை அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.










