பிரபலமான குளிர்பானமான கோலி சோடாவின் (Goli Soda) சுமார் 12,000 போத்தல்களை கொழும்பு மாநகர சபை (CMC) பறிமுதல் செய்துள்ளது.
குறித்த சோடா போத்தல்களின் மூடிகளில் உள்ள சிறிய கண்ணாடிக் கோலிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும் என்ற பாதுகாப்புக் கவலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர முதல்வர் வைரே காலி பல்தசார் (Vraie Cally Balthazaar) இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது, பாதுகாப்பற்ற பொதியிடல் காரணமாக குறித்த போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வகையான சோடா போத்தல்களில் உள்ள சிறிய கண்ணாடிக் கோலிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பாக 109 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, மொத்தமாக 3 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட சோடா போத்தல்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகச் செயற்பட்ட கொழும்பு மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் வெற்றியைப் பறிமுதல் செய்யப்பட்ட போத்தல்களின் எண்ணிக்கை அல்லது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாறாக, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தடுக்கக்கூடிய விபத்துகளின் எண்ணிக்கையே முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துகள் நிகழ்ந்த பின்னர் அவற்றுக்கு நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று அவை நிகழ்வதற்கு முன்னரே அவற்றைத் தடுப்பதும் முக்கியமானது என கொழும்பு மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.










