இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ள “ஒர்னாப்” (Arnab) புயலின் தாக்கம் இலங்கையின் வானிலையில் படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.










