நிலம், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளில் 5 இலட்சம் ரூபாவுக்கு மேல் பணமாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள், நடைமுறையிலுள்ள வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) எச்சரித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவு முறைமைகளுக்கு வெளியே, 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வணிகச் செலவுகள் பணமாகச் செலுத்தப்பட்டால், வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது அவை கழிக்கக்கூடிய செலவுகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் தனது வணிகச் செலவுக்காக 10 இலட்சம் ரூபாவை பணமாகச் செலுத்தினால், அந்தத் தொகையை வரிக் கணக்கீட்டின்போது செலவாகக் கழிக்க அனுமதிக்கப்படாது. இதனால், நிறுவனத்தின் வரிக்குட்பட்ட இலாபம் 10 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கும் என அவர் விளக்கியுள்ளார்.
இதன்படி, 30 சதவீத வழமையான நிறுவன வருமான வரி வீதத்திற்கு உட்பட்ட ஒரு நிறுவனம், மேலதிகமாக 3 இலட்சம் ரூபா வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதேபோன்ற கட்டுப்பாடுகள் சொத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டுள்ள குறித்த அதிகாரி, குறிப்பாக நில விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபத்திற்கான வரியைக் கணக்கிடும்போது இந்த விதிமுறைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, ஒருவர் 90 இலட்சம் ரூபாவுக்கு நிலமொன்றைக் கொள்வனவு செய்து, பின்னர் அதனை ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்தால், பொதுவாக அதன் மூலம் கிடைத்த இலாபமான 10 இலட்சம் ரூபாவே வரிக் கணக்கீட்டுக்கு உட்படுத்தப்படும்.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவு விதிமுறைகளை மீறி, குறித்த நிலம் ஆரம்பத்தில் பணமாகக் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால், அதன் கொள்வனவுச் செலவான 90 இலட்சம் ரூபாவை வரிக் கணக்கீட்டின்போது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், உண்மையான இலாபமான 10 இலட்சம் ரூபாவுக்குப் பதிலாக, நிலத்தை விற்பனை செய்த முழுத் தொகையான ஒரு கோடி ரூபாவையும் அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடப்படலாம் என அந்த அதிகாரி விளக்கியுள்ளார்.
உத்தியோகபூர்வமான நிதிப் பரிவர்த்தனை வழிமுறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் தற்போதைய வரி முறைமைக்கு வெளியே இடம்பெறும் நிதிச் செயற்பாடுகளை ஒழுங்குமுறைமைக்குள் கொண்டுவருதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.










