கொழும்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புத் தாங்கி ஒன்றிலிருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக, முத்துவெல்ல கடற்கரையை அண்மித்த 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி, கொழும்பு துறைமுகத்தின் JCT எண்ணெய் சேமிப்புத் தாங்கி இலக்கம் 108இல் இந்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 1,000 தொன் கொள்ளளவைக் கொண்ட குறித்த தாங்கி, சம்பவம் இடம்பெற்றபோது முழுமையாக எண்ணெய் நிரப்பப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடல் எரிபொருள் எண்ணெய் (Marine Gas Oil – MGO) கசிந்துள்ளதுடன், சேதமடைந்த வடிகால் வால்வு ஊடாகவே இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கசிந்த எண்ணெய், நகரசபையின் வடிகால் கால்வாயினுள் சென்று, பின்னர் முத்துவெல்ல கடற்கரையிலுள்ள நீர் வெளியேற்றுப் பகுதியின் ஊடாகக் கடலுக்குள் கலந்துள்ளது.
இதனால், படகுகள் தரையிறங்கும் இடம் உள்ளிட்ட 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதிகள் எண்ணெய் மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காலை 9.30 மணியளவில் அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் காலை 10.30 மணியளவில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், அதற்குள் கணிசமான அளவு எண்ணெய் வடிகால் கட்டமைப்பினுள் சென்று கடலையும் சென்றடைந்துள்ளது.
இதனையடுத்து, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ், இலங்கை துறைமுக அதிகாரசபையும் இலங்கை கடலோரக் காவல்படையும் இணைந்து எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
எண்ணெய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக கடலில் எண்ணெய்த் தடுப்பான்கள் (Oil Containment Booms) அமைக்கப்பட்டுள்ளதுடன், கசிந்த எண்ணெயைச் சேகரித்து அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 22ஆம் திகதி வரையிலும் சுத்திகரிப்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ள அதிகாரசபை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளை மீளமைப்பதற்கும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த எண்ணெய்க் கசிவினால் கடலுக்குள் கலந்துள்ள எண்ணெயின் சரியான அளவு இதுவரை வெளியிடப்படவில்லை.










