இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான காற்றழுத்த டயர்களின் தரம் மற்றும் தரநிலையை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதியிடப்பட்ட 2508/27 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட தரநிலைப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களின் மேலும் இரண்டு வகைகள் குறித்த விதிமுறைகளின் அட்டவணை B-இல் சேர்க்கப்பட்டுள்ளன. அவை இலங்கை தரநிலைகளுக்கு (SLS) அமைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கார் டயர்கள் (HS Code 4011.10.90) – SLS 1212 என்ற கார் டயர்களுக்கான தரநிலையை பூர்த்தி செய்ய வேண்டும்.
முச்சக்கர வாகனங்களுக்கான காற்றழுத்த டயர்கள் (HS Code 4011.90.10) – SLS 1347 என்ற முச்சக்கர வாகனங்களுக்கான காற்றழுத்த டயர் தரநிலையை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகள் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இலங்கையின் எந்தவொரு துறைமுகம் அல்லது விமான நிலையத்தை வந்தடையும் பொருட்களுக்கு பொருந்தும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.











