பாதுகாப்பற்ற அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) ஏற்பாட்டில் “குழந்தைகளுக்கு நஞ்சற்ற பழங்கள்” என்ற புதிய தேசிய நுகர்வோர் பாதுகாப்புத் திட்டம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதனையொட்டியே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பழங்களை விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பதிவு செய்யப்படுவதுடன், பழங்களை அறுவடை செய்வது முதல் பழுக்க வைப்பது, போக்குவரத்து மற்றும் விற்பனை செய்வது வரையிலான முழு விநியோகச் சங்கிலியிலும் பாதுகாப்பான நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பற்ற இரசாயனங்கள் பயன்படுத்தாமல் பழங்களை விற்பனை செய்யும் வணிகர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விசேட சான்றிதழ் வழங்கும் முறையையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பான பழங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை இலகுவாக அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் பழங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் வரைபடமாக்கப்படவுள்ளதுடன், பாதுகாப்பான பழங்களை விற்பனை செய்யும் நிலையங்களை நுகர்வோர் இலகுவாக அடையாளம் காணும் வகையில் QR குறியீட்டு அடிப்படையிலான முறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் வெறும் சோதனைகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாயிகள், விநியோகஸ்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பழ விநியோகச் சங்கிலியை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்காக பழங்களை கொள்வனவு செய்யும்போது, அவற்றின் தோற்றம் மற்றும் விலையை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் உணவுப் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும், நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.










