முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தாக்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஒளிப்பதிவாளர் சரித் நியோமால் மறுத்துள்ளார்.
தாம் குறித்த பாதுகாப்பு அதிகாரியை வேண்டுமென்றே தாக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், சம்பவம் இடம்பெற்றபோது ஒரு கையில் கமெராவையும் மற்றொரு கையில் கையடக்கத் தொலைபேசியையும் வைத்திருந்ததாகக் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு வெளியேறியபோது அவரை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்ததாகவும், அப்போது பாதுகாப்பு அதிகாரி தன்னை தள்ளியதாகவும் சரித் நியோமால் தெரிவித்துள்ளார். இதனால் தான் தடுமாறி விழும் நிலையில் இருந்தபோது, கீழே விழவிருந்த கமெராவைப் பிடிக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.
பின்னர் சமூக ஊடகங்களில், தான் கமெராவால் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக செய்திகள் வெளியாகியதை பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள அவர், தனது கமெராவின் பெறுமதி 800,000 ரூபாய்க்கும் அதிகம் எனவும், அதில் முக்கியமான நுண்ணிய பாகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் அவரை கமெராவால் தாக்கியிருந்தால், கமெரா சேதமடைந்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“நான் யாரையும் எந்த வகையிலும் தாக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன்” எனவும் சரித் நியோமால் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பாதுகாப்பு அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து வாக்குமூலம் வழங்குவதற்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜரான சரித் நியோமால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.










