பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில், அண்மையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் சேதமடைந்த இரண்டு விடுதிகளையும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக, பொலன்னறுவை சீனா–இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை சென்றிருந்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வைத்தியசாலையின் சேதமடைந்த சமையலறை, அதனுடன் இணைந்த ஆண் மற்றும் பெண் நோயாளர் விடுதிகள், பிரதான சத்திரசிகிச்சை அறை மற்றும் மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) ஆகியவற்றை சுகாதார அமைச்சின் செயலாளர் நேரில் பார்வையிட்டார்.
வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, சேதமடைந்த இரண்டு விடுதிகளிலும் சிறியளவிலான திருத்தப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு, மீண்டும் நோயாளிகளை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், சத்திரசிகிச்சை அறை சேவைகளையும் கூடிய விரைவில் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற மறுநாளே இரத்த மாற்று சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் உள்நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
எனினும், டயாலிசிஸ் சிகிச்சைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய மருத்துவ சேவைகளையும் படிப்படியாக மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள், குறிப்பாக வைத்தியசாலையின் மின்சார சுற்றுகள் மற்றும் மருத்துவ வாயு கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பல தொழில்நுட்பக் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
சில திருத்தப் பணிகளை வைத்தியசாலை நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ள முடியும் எனவும், ஏனைய பணிகளுக்கு விசேட தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் தொடர்புடைய நிறுவனங்கள் ஏற்கனவே மீளமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுகாதார அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர் இடையே அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சீனாவின் அவசர நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிவளத் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சீன நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இதேபோன்ற பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க சீன பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார்.
வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெறும் எனவும், அதேவேளை வைத்தியசாலை சேவைகளை மீள ஆரம்பித்து, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.










