இலங்கையில் ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய “கூரை சூரிய மின் ஒருங்கிணைப்பு மற்றும் மெய்நிகர் நெட் மீட்டரிங் திட்டம்” தொடர்பான ஒப்பந்தம், நேற்று வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அமைச்சர் மற்றும் பிரதி தூதுத் தலைவர் நவோகி கமோஷிடா, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஊடாக செயல்படுத்தப்படும் ஜப்பான் கூட்டு கடன் வழங்கல் பொறிமுறை நிதியத்தின் (JFJCM) கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் முதலாவது திட்டம் இதுவாகும்.
ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட, கூட்டு கடன் வழங்கல் நிதியத்திலிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
திட்டத்தின் கீழ், நீர்கொழும்பு முதல் காலி வரையிலான சுமார் 140 கிலோமீற்றர் தூரத்தில் உயர் திறன் கொண்ட High Temperature Low Sag (HTLS) மின்விநியோகக் கம்பிகள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் தற்போதுள்ள மின்விநியோக உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, தொழில்நுட்ப ரீதியான மின்சக்தி இழப்புகளை 30 சதவீதம் வரை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் மின்விநியோக வலையமைப்பில் முதலாவது Battery Energy Storage System (BESS) அமைப்பு இந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 6 மெகாவாட் மணித்தியால திறன் கொண்ட இந்த மின்கல சேமிப்பு அமைப்பு, பகல் நேரத்தில் உற்பத்தியாகும் மேலதிக சூரிய மின்சக்தியை சேமித்து, மாலை நேரங்களில் மின்சாரத்திற்கான அதிக கேள்வி நிலவும் காலப்பகுதியில் அதனை மீண்டும் விநியோகிக்க உதவும்.
2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் இலக்கிற்கு ஆதரவளிக்கும் வகையில், குறைந்த கார்பன் தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நீண்டகால பங்காளியாக ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.










