கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதனைத் தவிர்த்து தலைமறைவாக இருப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.
1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைச் சட்டத்தின் 60ஆவது பிரிவின் கீழ், கைது உத்தரவைத் தவிர்த்து தலைமறைவாக இருக்கும் ஒருவரை குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு எழுத்துமூலம் அறிவிக்கும் பிரகடனத்தை நீதிமன்றம் வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னர், குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்தக் காலப்பகுதியிலும் குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால், அதே சட்டத்தின் 61ஆவது பிரிவின் கீழ், அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கைது உத்தரவை தவிர்த்து தலைமறைவாக இருப்பவர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.










