இலங்கையின் முக்கிய மதஸ்தலங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தும் வகையில் வட்ஸ்அப் செய்திகளைப் பரப்பியதாகக் கூறப்படும் இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரங்கிரி தம்புள்ளை குகை விகாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்துக்குரிய கலாநிதி தானிகம ஆனந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எழுத்துமூலம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முறைப்பாட்டின்படி, வட்ஸ்அப் குழுவொன்றில் புத்தரை அவமதிக்கும் வகையிலான உள்ளடக்கங்களும், புனித தந்ததாது மாளிகை, ஜய ஸ்ரீ மகா போதி, தூபாராமை மற்றும் தம்புள்ளை குகை விகாரை உள்ளிட்ட முக்கிய மதஸ்தலங்களை இலக்காகக் கொண்டு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தும் செய்திகளும் பரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த செய்திகளை இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் பரப்பியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்தபோது, புத்தரின் உருவத்தை சிதைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பல படங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது, குறித்த உள்ளடக்கங்களை பொழுதுபோக்கிற்காகவே பரப்பியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










