அரிய வகை கடல் சிப்பிகளை விற்பனை செய்ய முயன்ற, சந்தேகநபர் ஒருவர், நேற்று வியாழக்கிழமை புத்தளம்-கல்பிட்டி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குருநாகல் வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் கல்பிட்டி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அரிய வகையைச் சேர்ந்த 20 கடல் சிப்பிகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் இலங்கை மேப் கவ்ரி (Sri Lanka Map Cowries) எனப்படும் அரிய வகை சிப்பிகள் 10 மற்றும் டைகர் கவ்ரி (Tiger Cowries) எனப்படும் சிப்பிகள் 10 அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










