கொழும்பிலுள்ள தனியார் வர்த்தக வங்கியொன்றின் சட்டப் பிரிவில் பணியாற்றும் 47 வயதுடைய பெண் சட்டத்தரணி ஒருவர், ரத்மலானை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து பொருட்களை திருட முற்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த பெண் தனது கைப்பையில் 520 கிராம் கோழி இறைச்சி, 250 கிராம் மாட்டிறைச்சி, வறுத்த முந்திரி, பல் துலக்கும் தூரிகை மற்றும் உணவு பொதியிடும் தாள்கள் உள்ளிட்ட மொத்தம் 5,290 ரூபாய் பெறுமதியான பொருட்களை மறைத்து வைத்திருந்தபோது நேற்று (18) பிடிபட்டுள்ளார்.
கண்காணிப்பு கமெரா காட்சிகளில், அவர் வாங்குவதாக நடித்து பொருட்களை இரகசியமாக கைப்பையில் வைத்துக் கொண்டது பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அங்காடி நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்காடியில் இருந்து வெளியேற முயன்ற சந்தேகநபரின் கைப்பையை பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன் சோதனையிட்டு, திருடப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களை மீட்டுள்ளனர்.
மேலும், இதே பெண் சட்டத்தரணி கடந்த 17 ஆம் திகதியும் அதே அங்காடியில் இருந்து மீன் வகைகளை இதேபோன்ற முறையில் திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சட்டத்தரணி அடையாள அட்டையில் பன்னிப்பிட்டிய முகவரி குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.