இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது.
குறித்த கடன் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடன் ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி இந்த முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளார்.
இரண்டு பகுதிகளாக நிதியுதவி
இந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியானது இரண்டு பகுதிகளாக வழங்கப்படவுள்ளது.
இதன்படி, கொள்கை அடிப்படையிலான கடனாக 50 மில்லியன் அமெரிக்க டொலரும், முதலீட்டு நிதியுதவியாக 50 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்படவுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்கள் (Ordinary Capital Resources) ஊடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
‘மீள்திறன் மிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான பேரினப் பொருளாதார மீட்சி துறைசார் அபிவிருத்தித் திட்டத்தை’ நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் நிறைவு
முன்மொழியப்பட்ட நிதியுதவி தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு 2026 செப்டெம்பர் 7ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
மேலும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஐந்து உப வேலைத்திட்டங்களின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 620 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் 2026 மார்ச் 16ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கும் ஆதரவு
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) கீழான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மேலதிக ஆதரவளிப்பதே இந்த விரிவான நிதியுதவி ஏற்பாட்டின் நோக்கமாகும்.










