சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் பெற்றோர் உள்ளிட்ட பெரியவர்கள் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதையும் வருமானம் ஈட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட சில பெரியவர்கள், குழந்தைகளை ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்துவதும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களில் தோன்றச் செய்வதும் அதிகரித்து வருவது தொடர்பில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தூண்டுதல், வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களில் ஈடுபடுத்துதல் மற்றும் பாலியல் ரீதியான வெளிப்படையான காட்சிகளுக்கு அவர்களை உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பணம் சம்பாதிப்பதற்காகவோ சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகவோ தமது குழந்தைகளை வேண்டுமென்றே ஆபத்துக்கு உட்படுத்தும் பெற்றோரின் செயற்பாடுகள், அவர்களால் பெற்றோர் என்ற பொறுப்பை முறையாக நிறைவேற்ற முடியுமா என்ற தீவிரமான கேள்விகளை எழுப்புவதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.
பெற்றோருக்குக்கூட குழந்தைகளின் தனியுரிமையைப் பாதிக்கும் உரிமை கிடையாது என வலியுறுத்திய அவர், பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் பிரபலமடைவது தொடர்பான முடிவுகளை எடுப்பது, போதிய முதிர்ச்சியையும் வயதையும் அடைந்த பின்னர் தனிநபர்களிடமே விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் பொறுப்பற்ற சமூக ஊடகச் செயற்பாடுகளால் குழந்தைகள் பாரிய ஆபத்துகளுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில், அவர்கள் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளாகக் கருதப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அத்தகைய சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பாதுகாப்பு அடிப்படையிலான காப்பாளர் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், குழந்தைகளுக்கு உகந்த ஊடகக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழிகாட்டல் தொகுப்பொன்றையும் தயாரித்து வருகிறது.
நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரும் இந்த வழிகாட்டல்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் குழந்தைகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நடைமுறை பொதுவாக ‘கிட்ஃப்ளூயன்சிங்’ (Kidfluencing) என அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பல நாடுகள் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆகியவை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் ஊடாகக் குழந்தைகள் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாக்கும் வகையில், அந்தப் பணத்தைப் பாதுகாக்கப்பட்ட கணக்குகளில் வைப்பிலிட வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இத்தகைய நடவடிக்கைகளில் குழந்தைகள் ஈடுபடும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் சில நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் முன்மொழியப்படும் புதிய சட்டக் கட்டமைப்பும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் சூழலில் குழந்தைகள் சுரண்டப்படுவதைத் தடுத்தல், அவர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் நலனை உறுதிப்படுத்துதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும்.










