இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வியைத் தொடர்வதற்கும், அதன் பின்னர் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், நீண்டகாலம் அங்கு வசிப்பதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் புதிய ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமான (NIOSH) ஊடாகத் தெரிவு செய்யப்படும் இலங்கை மாணவர்கள், தென் கொரியாவின் Changshin பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர முடியும்.
மேலும், தென் கொரியாவின் Gyeongsangnam-do மாகாணத்தில் அமைந்துள்ள தொழிற்துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அந்த மாகாணத்தில் நீண்டகாலம் வசிப்பதற்கும் இந்தத் திட்டத்தின் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்துவதே நோக்கமாகும்.
ஐந்து தரப்புகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தம்
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐந்து தரப்புகள் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் செயல்பாட்டு கட்டமைப்பைத் தயாரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதில் இலங்கையின் தொழில் அமைச்சு, தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH), தென் கொரியாவின் Gyeongsangnam-do மாகாணம், Sacheon வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், Changshin பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளடங்குகின்றன.
2023ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் சிக்கல்
இதற்கு முன்னதாக, தொழில்சார் பயிற்சி மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் NIOSH மற்றும் Changshin பல்கலைக்கழகம் இடையே 2023ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.
எனினும், அந்த ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.
இதனையடுத்து, குறித்த ஒப்பந்தத்தைத் திருத்தி, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் அதற்கான செயல்பாட்டு கட்டமைப்பையும் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐந்து தரப்புகளையும் உள்ளடக்கிய புதிய ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.










